ஓவியர் மணிவேல்
ஸ்ரீ உலகளந்த பெருமாள், திருக்கோவிலூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.பஞ்சகிருஷ்ண ஆரண்ய சேஷத்திரங்களில் ஒன்றாக விளங்குவது திருக்கோவிலூர். திருக்கோபாலன் ஊர் என்பது மருவி திருக்கோவிலூர் ஆனதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆழ்வார்களால் பாடல்பெற்ற திவ்ய தேசங்களில் நடுநாட்டுத் திருத்தலமாக விளங்கும் இந்தத் தலத்தில்தான், திருமால் உலகளந்த திருக்கோலத்துடன் விளங்குகிறார்.
அசுர சக்கரவர்த்தியான மகாபலி, இந்திர பதவி வேண்டி பல்வேறு யாகங்களைச் செய்தான். அந்த யாகங்கள் முடிவு பெற்றால், அசுரர்களின் ஆதிக்கம் மேலோங்கி விடும். அதனால் உலக உயிர்கள் துன்பப்படும் என்று கருதி, திருமால், வாமனனாக அந்த யாகசாலைக்குச் சென்றார். அங்கே இருந்த மகாபலியிடம் தனக்குத் தன்னுடைய கால்களால் அளந்து மூன்றடி நிலத்தைத் தானமாக வழங்க வேண்டும் என்று வேண்டினார்.
சிறு குழந்தை தானே என்று எண்ணிய மகாபலி, அசுர குருவான சுக்ராச்சாரியார் தடுத்தும், அவர் சொல் கேளாது, “மூன்றடி நிலத்தை அளந்து கொள்ளலாம்” என்று தானத்தை வழங்கினான். அந்தப் பொழுதே, குழந்தை வடிவமாக வந்த திருமால், ஓங்கி உலகளந்த உத்தமனாய் வளரத் தொடங்கினார்.
தன்னுடைய இடது திருவடியால் பூமியையும், வலது திருவடியால் ஆகாசத்தையும் அளந்த பெருமான், மீதமுள்ள ஓர் அடியை எங்கே அளப்பது என்று மகாபலியிடம் கேட்டார்.
உலகையே ஆளும் அரசன் என்ற அகந்தை அத்தனை நாளும் கண்களை மறைத்திருக்க, அந்த நொடிப்பொழுதே ஆணவம் அழிந்தவனாய் மகாபலி, பெருமானுடைய திருவடிகளிலேயே சரணம் புகுந்தான். யாருக்கும் கிடைக்காத பெரும் பேராகத் தன்னுடைய திருவடிகளை மகாபலியின் தலையிலே வைத்து அழுத்தினார் திருமால்.
திருக்கோவலூரில் நடந்த இந்தப் புராணத்தைச் செவிமெடுத்த மார்க்கண்டேய முனிவர், தன் மனைவி மித்ரவதியுடன் இங்கே தங்கி தவம் செய்து மீண்டும் உலகளந்த கோலத்தைத் தரிசித்தார்.
தமிழ் அருளாளர்களான ஆழ்வார்களும், முதல் மூன்று ஆழ்வார்கள் –பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும், இந்தத் தலத்தில் ஓர் இரவுப் பொழுதில் ஒன்றாகச் சந்தித்து, இறை சிந்தனையிலே ஈடுபட்டார்கள்.
அந்த வேளையில், நான்காவதாக ஒருவர் வந்து நெருக்க, அவர் யார் என்பதைக் காண ஞானதீபங்களை ஏற்றி, திருமகள் கேள்வனான திருமாலைக் கண்டு தரிசித்தார்கள். அப்போது அவர்கள் பாடி துதித்ததுதான் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் திருவந்தாதிகள்.
ஓவியம்:
பல்லவர் காலத்தில் பிரபலமடைந்து திருவிக்ரம வடிவத்தை பிரமாண்டமான முறையிலே இந்தக் கோலத்தை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். இந்தக் கருவறையின் சிறப்பு, உலகளந்த பெருமானின் திருக்கோலமும் அவரைச் சூழ்ந்திருக்கும் அடியார்களும்தான். அந்த அடியார்களின் வடிவங்களை அவற்றிற்கே உரிய தனி தன்மைகளோடு நேர்த்தியாக வடித்திருக்கிறார் நம்முடைய ஓவியர்.
பெருமானுக்கு இடதுபுறத்தில் முதல் ஆழ்வார்கள் மூன்று பேரும் கை கூப்பியபடி நிற்கிறார்கள். தலையிலே முடித்த கொண்டையோடு முகத்தில் திருமண் காப்பு தரித்து, மார்பில் துளசி மாலைகள் தவழ, தோள்களிலே சங்கு சக்கர முத்திரைகளைக்கூட விடாது, படம் பிடிக்க நம் ஓவியரால் மட்டுமே முடியும்.
ஆணவம் அழிந்த நிலையில், பெருமானுடைய திருவடிகளைச் சரணமாகப் பிடித்திருக்கும் மகாபலியின் முகத்தில் உள்ள பக்தியைப் பாருங்கள். முன்புறம் மார்க்கண்டேய முனிவரும், அவர் மனைவி மித்ரவதியும் இந்த அற்புதத் திருக்கோலத்தைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்திருப்பதை ஓவியரின் துரிகைகள் படம் பிடித்துள்ளன.
பெருமானுக்கு வலதுபுறம் அருளே வடிவாக மகாலட்சுமி தாயார் நின்றிருக்க, கருடனும் மற்ற அடியார்களும் வணங்கியபடி நிற்கிறார்கள். பட்டுப்பீதாம்பரம் தரித்து, லட்சுமிஹாரம் சாலகிராம மாலை என்று பல்வேறு ஆபரணங்களும் அணிந்து முகத்தில் கருணை பொங்க, தாமரைக் கண்களும் சிவந்த அதரத்துடனும் தோற்றமளிக்கும் பெருமானை வர்ணிக்க தமிழிலும் வார்த்தைகள் இல்லை. இந்தக் கலைப்படைப்பு நம் ஓவியரின் தனிச் சிறப்பு.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
