ஓவியர் மணிவேல்
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி, திருக்கடையூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1997
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
வழிபடும் அடியவர்களின் உடல் உபாதைகளைத் தீர்த்து நீடித்த அயுளை வழங்கும் திருத்தலம் இது. உலக நன்மைக்காக, நான்முகன் இங்கே பல காலம் தங்கியிருந்து இறைவனை வேண்டினான். மிருகண்டு என்ற முனிவர், பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபக்தியோடு நல்ல குணங்கள் கொண்டும், பதினாறு ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்ட ஒரு பிள்ளையைப் பெற்றார். மார்க்கண்டேயன் என்று பெயரிட்ட அந்தக் குழந்தை, வளர்ந்து வரும் பருவத்திலேயே சிவபக்தி செய்யும்படி உபதேசித்தார்.
நாள்தோறும் சிவபூஜை செய்து வந்த மார்க்கண்டேயரின் 16வது பிறந்த நாளன்று, அவருடைய உயிரைப் போக்க எமன் நேரிலே வந்தார். எப்போதும் தன் தூதுவர்களை அனுப்பும் எமதர்மர், சிவபக்தி செய்பவர்களை அழைத்துப்போக அவரே நேரில் வர வேண்டும் என்பது விதி.
காலனின் கோரமான வடிவத்தையும், அவன் ஏறி வந்த எருமை மாட்டின் வீரியத்தையும் பார்த்துப் பயந்த மார்க்கண்டேயர், அபயம் அபயம் என்று ஓடிச்சென்று அவர் பூஜிக்கும் அமிதர்கடேஸ்வர லிங்கத்தை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டு இறைவனைத் துதித்தார்.
தன்னையே புகழாக அடைந்த அடியவர்களுக்கு எதையும் செய்யக் காத்திருக்கும் கருணைக் கடலான சிவபெருமான், அந்தக் கனப்பொழுதே சிவலிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்டு, காலனை தன் இடது திருவடியால் உதைத்து கீழே தள்ளினார். தன் அடியவரை நடுங்கச் செய்த குற்றத்திற்காக, அவன் மேலேறி தன் திருவடிகளால் நடனமாடி காலனுக்கும் காலனாகக் காட்சிதந்தார். காலகாலர் என்றும் காலசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படும் இவர் இந்தத் தலத்தின் விசேஷ மூர்த்தி.
சுவாமி சன்னதியின் மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி விளங்கும் காலசம்ஹார மூர்த்தியின் செப்புத் திருமேனி சோழர்கால கலையின் உச்சம். அதன் எல்லா சிறப்புக் குறிப்புகளையும் ஒருங்கே அமைத்த ஓவியரின் இந்தப் படைப்பு சோழர் கலைத்திறனோடு ஒப்பிடக் கூடியது.
கையில் முழுவும் பாசமும் ஏந்தி, சூலாயுதத்தால் எமனையே அழித்தும், தன் அடியார்களைத் துன்புறுத்தியவர்கள் பெற்ற நிலை இதுதான் என்று சுட்டிக்காட்டும் இடது திருக்கரமும், தரிசிக்கும் அடியார்கள் மனதில் இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்தை ஊன்றச் செய்யும்.
சுவாமியின் திருவடிக்குக் கீழே விழுந்து கிடக்கும் எமனை, ஒரு பூதக்கணம் கையிறு கட்டி அப்புறப்படுத்தும் காட்சியை நேரில் சென்றாலும் காண முடியாது. பெருமானின் கருணையை வணங்கியபடி கொண்டாடும் மார்க்கண்டேயரின் திருவுருவம் எல்லோரிடத்திலும் கருணை கொண்டவளாக, பாலாம்பிகையாக அம்பிகை நிற்கும் அழகையும் சொல்ல வார்த்தைகளே இல்லை.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
