ஓவியர் மணிவேல்
ஸ்ரீ அன்னபூரணி மற்றும் சிவா, வாரணாசி
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு- 1989
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
அன்றைய தினம் ஐப்பசி மாத தீபாவளி, அமாவாசை விடியல் வேளையில் சதுர்த்தசி திதி நிறைந்திருந்த நேரத்தில், காசி நகரத்தின் வீதிகள் தோறும் சென்று, பைரவக் கடவுள் பலியேற்று வந்தாராம். எத்தனை வீடுகளில் பெற்றாலும் அவருடைய கபாலம் நிறையாமல் இருந்தது.
யார் அன்னமிட்டால் நிறையும் என்று அவர் வினவ, காசி நகரவாசிகள் அன்னபூரணி அம்மையின் இல்லத்தைக் காட்டிக் கொடுத்தார்களாம். அந்த வைகறைப் பொழுதில் அவள் இல்லத்தின் பொற்கதவுகளை, பைரவப் பெருமான் தட்டி அழைக்க, ஞானமே வடிவாய் ஆபரணங்கள் ஒளிர, அன்னை கதவுகளைத் திறந்து, அவளுடைய ஞான ஆசனத்தில் அமர்ந்து இடது கையில் பொற்பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாத அன்னமேந்தி, வலது கையில் பிடித்திருந்த தங்கக் கரண்டியில் அள்ளி கபாலத்தில் இட அந்தக் கபாலம் நிறைந்ததாம்.
சிவலோகத்தில் ஆழ்ந்திருக்கும் பைரவப் பெருமானுக்கு, சிவன் அருளாக இருந்து, அன்னை சிவஞானம் அளித்த அந்த நிகழ்வை நம்முன்னே பிரத்யட்சமாகக் காட்டியுள்ளார் ஓவியர்.
தங்கத் தாமரை பீடத்தில் பொன்னிறத் திருமேனியோடு அங்கமெல்லாம் ஆபரணங்கள் மிளிர, அன்னை யோகாசனத்திலே அமர்ந்திருக்கிறாள். கையிலே தாங்கியிருக்கும் அன்ன பாத்திரம் உண்மையில் உயிர்களைக் காக்கும் அட்ஷய பாத்திரம்.
அழகே வடிவான அன்னையின் உருவமும், அருளே வடிவான அவள் திருக்கண்களின் அமைப்பும், அள்ள அள்ளக் குறையாத ஆனந்தத்தைத் தருகிறது. அவள் எதிரே நிற்கும் பைரவப் பெருமான் கையில், உடுக்கையும் திரிசூலமும் தாங்கி கபாலி கோலத்திலே உள்ளார். அதனால் தான் இடது கையிலே கபால பாத்திரம் ஏந்தியிருக்கிறார். திருமேனியிலே மண்டை ஓடு மாலையும், ருத்ராட்ஷ ஸ்படிக மாலையும் அணிந்து மேனியெங்கும் நாகங்கள் சூழ விளங்கும் பைரவரின் வடிவம் ஓவியரின் மற்றுமொரு நேர்த்தியான படைப்பு.
தீபாவளியன்று மட்டும் நாம் தரிசிக்கக்கூடிய இந்த அலங்காரத்தை, நாள்தோறும் காணும்படி செய்திருக்கிறார் நம் ஓவியர்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
